தவறைத் தவிர்த்திருக்கலாம்’ : ராகவேந்திர மண்டப சொத்து வரி விவகாரம் குறித்து ரஜினி டுவிட்!!

ராகவேந்திரா மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 8வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, ரூ.6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.
Chennai High Court - Updatenews360
அந்த மனுவில், கொரோனா சமயத்தில் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்த காரணத்தினால், சென்னை மாநகராட்சி விதித்துள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன்..? என்று ரஜினிக்கு கேள்வி எழுப்பினார். மாநகராட்சியை அணுகாமல் நேரடியாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி நடிகர் ரஜினிகாந்த் தரப்பினருக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கை ரஜினி தரப்பினர் வாபஸ் பெற்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம்,” என்ற கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். அதோடு, அனுபவே பாடம் என்ற ஹேஸ்டேக்கையும் அவர் போட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!