‘என் உயிருக்கு ஆபத்து’ : நடிகர் விஜய் சேதுபதி குறித்து பகீர் தகவலை வெளியிட்ட இயக்குநர் சீனு ராமசாமி..!!

பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இன்று திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும், அவசரம்.” என்ற பதிவை போட்டிருந்தார். இது தமிழக திரையுலகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் எதிர்கொண்டு வரும் பிரச்சனை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது :- இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் எனது கருத்தை தெரிவித்துள்ளேன். தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே, இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்படுகிறேன் என்று தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
விஜய்சேதுபதி டுவிட்டர் பக்கத்தில் நன்றி, வணக்கம் எனக் குறிப்பிட்டது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 800 படத்தில் நடித்தால், உலகளவில் பிரபலமடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டதாகவும், ஆனால், அரசியல் விமர்சனங்கள் எழுந்ததால், தயாரிப்பு நிறுவனமே இந்தப் படத்தில் இருந்து விலகியது. எனவே, நன்றி, வணக்கம் கூறியதாக தெரிவித்தார்.
விஜயதசமி பூஜைக்கு கூட அவரது அலுவலகத்திற்கு சென்று வந்தேன். தமிழ் இனம் விஜய்சேதுபதி மீதான அன்பை புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை போலத்தான் நானும் எனது கோரிக்கையை வைத்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்படுகிறேன் என்றுக் கூறி நாள்தோறும் மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி மூலம் தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். இதனால், எனக்கு மனப்பதற்றம் ஏற்பட்டது. அதனை வெளிப்படுத்தவே டுவிட்டரில் ஆபத்தை உணர்வதாக பதிவிட்டேன். எனக்கு வரும் மிரட்டல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன். எனக்கும், விஜய்சேதுபதிக்கும் இடையே எதிர்வினையை உருவாக்கி, அதன்மூலம் குளிர் காய்கின்றனர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!