சென்னையின் பிரதான சாலைகள் மூடல் ; 10 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை : நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயல் இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தப் புயல் எச்சரிக்கை விடுத்ததில் இருந்தே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக அரசு திறந்து விட்டுள்ளது. படிப்படியாக நீர்திறப்பு 5000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்படுவதாக மாநகர் போலீசார் அறிவித்துள்ளனர். தாம்பரம், போரூர், மணலி, ஈசிஆர், ஓம்ஆர் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!