பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்…
அவரை ஓரளவாவது புரிந்தவர்கள், படித்தவர்களுக்கு மயிர்க் கூச்செரிய வைக்கும் பெயர்! முழுசாகப் புரிந்தவர்களுக்கு தன்னிகரில்லா தலைவர், வழிகாட்டி!

கொடிய சூழலில் பிறந்து, மோசமான வறுமையில் படித்து, படிப்பில் உலகில் எவரும் தொடாத சிகரத்தை அடைந்தும், அந்த மேதைமையை தன் வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மக்களின் விடியலுக்காகப் பயன்படுத்திய மாமனிதர்! மேலைத் தேசம் சென்ற பிறகும் கூட விடாமல் துரத்திய வறுமையையும் பட்டினியையும் போராடித் தோற்கடித்து உயர் பட்டங்கள் பெற்றவர்.
இளமையில், கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, அரசியல் அரங்கிலும் அம்பேத்கர் மாதிரி அவமானங்களையும் போராட்டங்களையும் சந்தித்தவர்கள் யாருமில்லை. மும்பையில் குடியிருக்க வீடு கிடைக்காத நிலையில், வேறு சாதிப் பெயரைச் சொல்லி வீடு பெறுகிறார். ஒரு நாள் அந்த உண்மை தெரிந்துவிட, வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கழிந்த பிறகும் இந்த அவலம் தொடர்கிறது. அம்பேத்கரின் அவசியமும் தொடர்கிறது!

ஒரு நாளில் நான்கு மணி நேரங்களைக் கூட தூக்கத்துக்கென்று ஒதுக்காத மனிதர் அண்ணல். எப்போதும் எழுத்து, படிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான சிந்தனையிலேயே அவர் காலம் கழிந்தது. இந்த தூக்கமற்ற உழைப்பே அவருக்கு நீரிழிவு நோயைப் பரிசாக அளித்தது.
அப்படியும் கூட அந்த மனிதர், தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. “என் இறுதிக் காலம் நெருங்குகிறது.. ஆனால் என் மக்களின் துயரங்களுக்கான இறுதிக் காலம் ரொம்ப தூரத்திலிருக்கிறதே… என்னால் எப்படி வேளைக்கு உண்டு, உறங்கி காலம் தள்ள முடியும்?” – தன்னைக் கவனித்துக் கொண்ட மருத்துவரிடம் அண்ணல் எழுப்பிய கேள்வி!
1954-ல் அவர் கண் பார்வையைப் பறித்தது நீரிழிவு. பார்வை போய்விட்டதெனக் கூறி பரிதாபம் தேடவில்லை அந்த மகாத்மா. மனித குலத்தின் விடியலுக்கான சமூக அரசியல் போரைத் தொடர்ந்தார். தன் மூச்சு நிற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட ‘The Buddha and His Dhamma’ என்ற புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்! இந்தியா என்றல்ல… உலகெங்கும் ஒடுக்கப்பட்டவனாய் தன்னை உணரும் ஒவ்வொருவருக்கும் அம்பேத்கர்தான் ஒளிவிளக்கு. அவர் வாழ்க்கைதான் ஆகப் பெரும் நம்பிக்கை.
