திருச்சி: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. மறு நாள் பகல் பத்து உற்சவம் தொடங்கியதால் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நம்பெருமாளை தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்படுவதையொட்டி நேற்று இரவு கோவில் கோபுரங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலித்தன. சொர்க்கவாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள மணல் வெளியில் நம்பெருமாள் சுற்றி சுற்றி சேவை சாதிக்கும் இடத்தில் கீற்று பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பூலோக வைக்குண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் வைக்குண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5.12 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபதம் வாசல் வழியாக நம்பெருமாள் பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.