கொரோனா தொற்று பரவாத கண்டமாக அண்டார்டிகா நீடித்து வந்த நிலையில், தற்போது அங்கும் கொரோனா வைரஸ் தரையிறங்கியுள்ளது என சிலி இராணுவம் இந்த வாரம் அறிவித்துள்ளது.
கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சுகாதார மற்றும் இராணுவ அதிகாரிகள் கடல் மற்றும் பனிப்பாறைகளால் சூழப்பட்ட தொலைதூர ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பணியாளர்களை வெளியேற்றவும் தனிமைப்படுத்தவும் முயற்சி செய்து வருகின்றனர்.
சிலியின் ஆயுதப்படைகள் அதன் பெர்னார்டோ ஓ’ஹிகின்ஸ் தளத்தில் குறைந்தது 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. இதில் 26 ராணுவ வீரர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் 10 சிவில் ஊழியர்கள் அடங்குவர்.
சிலியின் இராணுவத்தால் இயக்கப்படும் நிரந்தர ஆராய்ச்சி நிலையம், வடக்கு திசையில் உள்ள அண்டார்டிகாவில் ஒரு தீபகற்பத்தின் நுனிக்கு அருகில் அமைந்துள்ளது.
சிலி படகோனியாவில் உள்ள மாகல்லேன்ஸில் உள்ள சுகாதார அதிகாரிகளால் அடிப்படை ஊழியர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று இராணுவம் கூறியது. இதுவரை எந்த சிக்கல்களும் இல்லை.
அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் இராணுவ நிலையங்கள் கொரோனா தொற்றிலிருந்து விலகியிருக்க பல முக்கிய நடவடிக்கைளை மேற்கொண்டன. இருந்தும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவிற்கு மிக நெருக்கமான மக்கள்தொகை கொண்ட பகுதிகளான மாகல்லேன்ஸ் பகுதி அண்டார்டிகா கண்டத்திற்குச் செல்லும் பல படகுகள் மற்றும் விமானங்களுக்கான புறப்படும் இடமாகும். இது சிலியில் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று என்பதால் இங்கிருந்து பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.