இஸ்லாமிய நாடான துனிசியாவிலிருந்து இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு படகில் மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோது 20 ஆப்பிரிக்கர்கள் இறந்ததாக துனிசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலோர காவல்படை ஐந்து பேரை மீட்டதுடன், இன்னும் கணக்கிடப்படாத சுமார் 20 பேரை தேடி வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
துனிசிய துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸுக்கு அருகிலுள்ள கடற்கரைப்பகுதி ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடும் மக்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.
“படகு ஸ்ஃபாக்ஸ் கடற்கரையிலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில் மூழ்கியது. இருபது சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அனைவரும் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியைச் சேர்ந்தவர்கள்.” என்று பாதுகாப்பு அதிகாரி அலி அயரி கூறினார்.
படகில் பயணித்த மற்றவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.