ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று தொடங்கும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம்

காளஹஸ்தி: உலகப் பிரசித்தி பெற்ற வாயு தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா இன்று தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
உலகப் பிரசித்தி பெற்ற வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகள் செய்து உள்ளனர். அதன்படி முதல் நாளான்று பகல் 3 மணிக்குமேல் கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்குமேல் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் வீதிஉலா நடக்கிறது.
 
 
மூன்றாவது நாளான 8-ந் தேதி காலை 10 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வருகிறார்கள். இரவு 10 மணிக்கு பூத வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சூக (கிளி) வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வருகிறார்கள். தொடர்ந்து 11-ந் தேதிவரை தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. 7-வது நாளான 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மிகவும் உகந்ததாக பக்தர்களால் கருதப்படும் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு 9 மணிக்கு காளஹஸ்தியில் உள்ள நாரதர் (புஷ்கரணி) குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறும்.
8-வது நாளன்று காலையிலும், இரவிலும் வீதி உலா நடக்கிறது. 9-வது நாள் அதிகாலை 3 மணிக்கு ஆதி தம்பதியர்களான சிவன்- பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணிக்கு ருத்ர அம்பாரிகளில் சாமி, அம்பாள் புதுமண தம்பதிகளாக நான்கு மாட வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சபாபதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. 16-ந் தேதி பகல் 12.30 மணிக்கு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ கொடி இறக்குதல் நடைபெறும். 17-ந் தேதி இரவு 9 மணிக்கு பல்லக்கு சேவையும், 18-ந் தேதி காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், 19-ந் தேதி காலை 10.30 மணி முதல் கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!